Kannagi Dialogue Lyrics in Tamil from Poompuhar Movie. Thera Manna Dialogue in Tamil Lyrics. Poompuhar Movie Kannagi Dialogue Lyrics.
Kannagi Dialogue Lyrics in Tamil from Poompuhar Movie. Thera Manna Dialogue in Tamil Lyrics. Poompuhar Movie Kannagi Dialogue Lyrics.
கண்ணகி: காவலரே காவலரே
காவியும் நீரும் கையில் தனி சிலம்பும்
ஆதிபிடிபோல வடிவம் கொண்டு
ஒருத்தி வந்திருக்கிறாள்
உம்மை சந்திக்க என்று
உமது மன்னனிடம் சென்று
உடனே சொல்லுங்கள்
சொல்லமாட்டீர்களா விலகுங்கள்
மன்னன்: யார்?
அரண்மனை காவலர்களை
மீறி ஆவேசகோலத்தில்
உள்ளே நுழையும் நீ யார்?
கண்ணகி: புறாவுக்கு உடல் தந்து
புகழ்பெற்ற மன்னவரின் வரலாற்றை
தேர்காலில் மகனை இட்டு நியாயம் காத்த
மனுநீதி சோழனது பெரும் கதையை
நீதியின் இலக்கணமாய் பெற்று
பெருமை கொண்ட திருமாவளவன்
கரிகால் சோழனது பூம்புகாரே எனது ஊர்
பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள்
எனது பெயர் கண்ணகி
மன்னன்: உன் முறையீடு என்னவோ
கண்ணகி: முத்து விளைகின்ற மூன்று
கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில்
மும்முரசு கொட்டி
முச்சங்கம் வளர்த்து
முக்கொடியின் நிழலிலே
முத்தமிழ் காப்பாற்றும்
முவேந்தர் பரம்பரையின்
பெருமைதனை மூழியாக்க
முடிபுனைந்த மன்னவனே
என் முறையீட்டை கேட்ப்பதற்கு முன்
நான் யார்? என்று
முழுவதும் தெரிந்து கொள்க
மன்னன்: நீ யார்?
கண்ணகி: கண்ணகி, கையில்
தனி சிலம்புடன் வந்திருக்கும் கண்ணகி
நீதி வழுவா நெடுஞ்செழிய பாண்டியனை
துணிந்து இகழ்ந்துறைக்க வந்திருக்கும்
கண்ணகி
மன்னன்: என்ன?
கண்ணகி: பாண்டிய மன்னா,
ரோமாபுரியின் கொலு மண்டபத்திலே
உனது தூதுவர்கள் இருக்கிறார்கள்
இதோ பாண்டியத்து பேரவையிலே
ரோமாணியார்கள் வீரர்களாகவும்
தூதுவர்களாகவும் வீற்றிருக்கிறார்கள்
கண்ணகி: அந்த கொடிக்கம்பம் முறிந்து விழ
அயல் நாட்டவர் இகழ்ந்துறைக்க
உனது கொடுங்கோல் அளித்த
அவசர தீர்ப்புக்கு ஆளாகி
கொலையுண்ட கோவலன் மனைவி
கண்ணகி நான் என்பதையும்
அறிந்திடுக அரசே அறிந்திடுக
மன்னன்: ஓ கோவலன் மனைவி
சிலம்பு திருடிய கள்வனின் மனைவி
கண்ணகி: போதும்
யாகாவாராயினும் நா காக்க
மன்னா நா காக்க
யார் கள்வன்
என் கணவனா கள்வன்
இல்லை இல்லை
அவரைகள்வன் என்று குற்றம் சாட்டிய
கயவர்களே கள்வர்கள்
அரசி: ஆத்திரத்தில் அறிவு
கண்ணை மூடிவிடாதே கண்ணகி
தளபதி: கையும் களவுமாக
பிடிபட்டான் உன் கணவன்
மன்னன்: கள்வனை தமிழகத்து நீதி
கொல்லாமல் விடாது என்பது
உனக்கு தெரியுமல்லவா
கண்ணகி: நீதியின் இலக்கணம் உரைக்கும்
நெடுஞ்செழிய பாண்டியனே
உனது நாட்டில் எதற்கு பெயர் நீதி
நல்லான் வகுத்ததோ நீதி அல்ல அல்ல
வல்லான் வகுத்ததே இங்கு நீதி
அதனால் தான்
நான் வணங்குகிற தெய்வத்தை
என் வாழ்வு கருவூலத்தை
சாவு படுகுழியில் தள்ளிவிட்டீர்கள்
கண்ணகி: கொற்றவனே
குடை நிழலில் குந்தறம் மூர்ப்பவனே
எண்ணிப்பார்
கொலு மண்டபத்தில்
விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு
கோவில் மண்டபத்தோடு முடிவானேன்
சிந்தியுங்கள் நன்றாக சிந்தியுங்கள்
கண்ணகி: குற்றம் சாட்டப்பட்டவரின்
மறுப்புகளுக்கு மதிப்பு தராமல்
கொலைவாளின் வேலை
அவ்வளவு அவசரமாக நடைபெறுவானேன்
இதற்கு பெயரா நீதி
இதற்கு பெயரா நேர்மை
இதற்கு பெயரா நியாயம்
இதற்கு பெயரா அரசு
உமக்கு பெயரா அறம் காக்கும் மன்னன்
மன்னன்: என்ன
அரசி: அரசே
மன்னன்: கண்ணகி
உன் கணவன் கையில் இருந்தது
அரசி கோப்பெரும் தேவியின் சிலம்பு
கண்ணகி: கோப்பெரும் தேவியின் சிலம்பு இல்லை
கோவலன் தேவியாம் என்னுடைய சிலம்பு
மன்னன்: நம்பமுடியாது என்னால்
கண்ணகி: நீ யார் நம்புவதற்கு
உன்னை யார்? நம்பச்சொல்கிறார்கள்
உன் மீது வழக்கு உரைக்க வந்தவள் நான்
குற்றவாளி நீ
மன்னன்: நான் குற்றவாளி?
கண்ணகி: ஆம் நீ குற்றவாளி
அதனால் தீர்ப்பளிக்கும் உரிமை
உன் கையில் இல்லை
இதோ இருக்கிறார்கள்
பெருந்தன்மை பெரியோர்கள்
இவர்களே இப்போது நீதிபதிகள்
இவர்கள் உரைக்கட்டும் நல்ல தீர்ப்பு
கண்ணகி: ஆன்றோர்களே
அறிவு மிகு அரும்பெரும் படை கொண்டவன்
பாண்டியன் என்பதற்காக
நீதியின் பாதயை வளைக்காமல்
ஆரிய படை கடந்தான்
அவனியெல்லாம் புகழ் பெற்றான்
என்ற கீர்த்தி திரையால்
அவன் செய்த குற்றத்தை மறைத்துவிடாமல்
தாயின் மேல் ஆணையாக
தமிழின் மேல் ஆணையாக
தாயகத்து மக்கள் மேல் ஆணையாக
தீர்ப்பு கூறுங்கள் நல்ல தீர்ப்பு கூறுங்கள்
கண்ணகி: கோப்பெரும் தேவியின் சிலம்பை
கோவலன் திருடினான் என்பது குற்றச்சாட்டு
அதற்காக மரணதண்டனை
அது ஆராயாமல் அளித்த தீர்ப்பு
அதற்கு மன்னன் பொறுப்பு
இது என் வழக்கு
மந்திரி: வழக்குக்கு என்னம்மா ஆதாரம்
கண்ணகி: ஆதாரம் இதோ இந்த சிலம்பு
இதற்கு இணையான
மற்றொரு சிலம்பைத்தான்
என் மணவாளன் விற்க வந்தான்
மாபாவிகள் அவரை
கொன்று குவித்துவிட்டார்கள்
மன்னன்: அப்படியானால்
தேவி அணிந்திருக்கும் சிலம்பு
கண்ணகி: அவைகளில் ஒன்று என்னுடையது
மன்னன்: அதற்கு அடையாளம்
கண்ணகி: ம் அடையாளம் வேண்டமா
ஆயிரம் கேள்விகள் என்னை கேட்டு
உன்னை குற்றமற்றவனாக
ஆக்கிக்கொள்ள துடிக்கிறாயே
இப்படி ஒரு கேள்வி நேருக்கு நேர்
என் அத்தானை கேட்டிருந்தால்
நீதி வழுவா நெடுஞ்செழியன் என்ற
பெயர் உனக்கு நிலைத்திருக்குமே
என் அத்தானின் உயிரும் தங்கிருக்குமே
மந்திரி: அம்மா, தேவி அணிந்திருப்பதில்
ஒரு சிலம்பு உன்னுடையது என்பதை
மெய்ப்பித்துக்காட்டுவாயா?
கண்ணகி: ம் மெய்ப்பித்து என்ன பயன்
இறந்து போன என் கணவனை
எழுப்பித்தருவீர்களா?
வெட்டுண்ட தலைதனை ஒட்டத்தருவீர்களா?
முடியாது உங்களால் முடியாது உங்களால்
கண்ணகி: ஆனால் ஒன்று
உயிர் போனதால் தொங்கிய
என் அத்தானின் தலைபோல்
உங்கள் தலைகளையும்
தொங்கவைக்கிறேன்
உங்கள் நீதி போனதால்
நேர்மை போனதால்
மானம் போனதால்
கண்ணகி: மதுரை பாண்டியா,
உன் மனைவின் பழைய சிலம்பிலே
உள்ள பரல்கள் முத்துக்களா?
மாணிக்கங்களா?
மன்னன்: முத்துக்கள்
அதுவும் கொற்கை முத்துக்கள்
கண்ணகி: என்னுடைய சிலம்பிலே
உள்ளவை மாணிக்க பரல்கள்
மன்னன்: அப்படியா எங்கே பார்க்கலாம்
தேவி இப்படி கொடு இதோ பார்
பார்த்தாயா முத்துக்களை
கண்ணகி: ம் அடுத்த சிலம்பு
மன்னன்: ஆ மாணிக்கங்கள்
கண்ணகி: மாணிக்கங்கள் அல்ல
ரத்தத்துளிகள்
தருமத்தின் கண்கள்
வடிக்கின்ற ரத்தத்துளிகள்
கண்ணகி: பாண்டியா
உனக்கு இன்னும் சந்தேகம் இருந்தால்
இதோ என்னுடைய மற்றொரு சிலம்பு
மன்னன்: மாணிக்கங்கள்
கண்ணகி: அமைச்சர்களே
அரும்பெரும் சான்றோர்களே
இதற்கு என்ன பதில்
தலை தொங்கிவிட்டதா
நீதி கவிழ்ந்துவிட்டதா
வாய் அடைத்துவிட்டதா
நெடுஞ்செழிய பாண்டியனின்
அறம் வரம் திறம் அத்தனையும்
மண்ணோடு மண்ணாக கலந்துவிட்டதா
கண்ணகி: அய்யையோ யோ யோ
ஏன் இந்த வாட்டம்
தமிழகம் சிரிக்கிறது பாண்டியா
நீ தலைகுனிந்து நிற்பதை பார்த்து
தமிழ்நாட்டு மறை நூல் திருக்குறள்
கேலி பேசுகிறது பாண்டியா
உன் நீதி வழங்கிய செய்தி கேட்டு
கண்ணகி: ஆனை சேனை ஆயிரம் ஆயிரம்
எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து
தலை குனியாமல் படை நடத்தும்
உனது வீரம் எங்கே கம்பீரம் எங்கே
வெற்றித்திருப்பாடு எங்கே
எங்கே எங்கே எங்கே
கண்ணகி: மன்னா, மாசுபடரவும்
மாநிலம் இகழவும் நீதி வழங்கிய
உனக்கு செங்கோல் எதற்காக
மாபாதகம் புரிந்த உனக்கு
மணிமுடி எதற்காக
மன்னன்: தேவையில்லை
கண்ணகி: வேந்தர் குலத்திற்கு
இழிவு கற்பிக்க வந்த உனக்கு
வெண்கொற்ற குடை எதற்காக
மன்னன்: தேவையில்லை
கண்ணகி: அழு என்னை காலமெல்லாம்
அழவைத்த காவலனே அழு
என் காதலனை என் கண்ணாளனை
கண் நிறைந்த மணவாளனை
துடிக்க துடிக்க கொன்றுவிட்ட பாவி
அழு அழு நன்றாக அழு
மன்னன்: கண்ணகி
உன் கணவன் கள்வன் அல்ல
கள்வன் அல்ல
ஆராயாமல் அவசரத்தில்
கொன்று வருக அவனை என்று
ஆணையிட்ட நானே கள்வன்
நானே கள்வன்
தமிழே தாயகமே என் தாயே
என்னை மன்னித்துவிடம்மா
என்னை மன்னித்துவிடு
சபையோர்: மன்னா அரசே
மன்னா அரசே
அரசி: அரசே அரசே அரசே
அரசே அரசே
நீதி தவறியதால்
வளைந்த செங்கொலை
உங்கள் உயிரை கொடுத்து
நிமிர்த்திவிட்டீர்கள் அரசே
நிமிர்த்தி விட்டீர்கள்
கண்ணகி: அழியட்டும் ஒழியட்டும்
எல்லாம் அழியட்டும்
அழியட்டும் ஒழியட்டும்
தீ பரவுட்டும்